ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சனிபகவானுக்கு தனிச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தினமும் ஒவ்வொரு சாமிக்கு சிறப்புப் பூஜைகள், அபிஷேகம் செய்வது பாரம்பரியமாக இருந்து வருகிறது.
வார இறுதி நாட்களில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். ஆனால், கடந்த சில நாட்களாக புயல் எச்சரிக்கையால் பக்தர்கள் இல்லாமல் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர். ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை, சனீஸ்வர அபிஷேகத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் வந்தனர்.
பொதுவாக, கோவில்களில் சனி பகவானுக்கு தனிச் சன்னதி இருப்பது அரிது. ஆனால், தென்கைலாயம் என்று அழைக்கப்படும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சனிபகவானுக்கு தனிச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது, மட்டுமின்றி தங்கம், வெள்ளிக் கவசங்களும் அணிவிக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமையான நேற்று ராகு-காலத்தில் பக்தர்கள் ராகு-கேது சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். குறிப்பாக சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்தனர்.






