மகாவிஷ்ணுவை போற்றும் ‘பாஞ்சராத்திர தீபம்’


மகாவிஷ்ணுவை போற்றும் ‘பாஞ்சராத்திர தீபம்’
x

பெருமாள் கோவில்களில் 'பாஞ்சராத்திர தீபம்' என்ற பெயரில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சியளித்த தினத்தை திருக்கார்த்திகை திருநாளாக கொண்டாடுகிறோம். அதுபோல மகாவிஷ்ணு ஜோதி வடிவாக தோன்றி, உலகத்தை காத்த நாள் 'விஷ்ணு கார்த்திகை' என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாஞ்சராத்திர தீபம் ஏற்றப்படுகிறது.

திருக்கார்த்திகை தினத்திற்கு முந்தைய நாள் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. திருக்கார்த்திகை அன்று மகா தீபம் ஏற்றப்படும். அடுத்த நாள் பௌர்ணமி திதியில் கார்த்திகை நட்சத்திரத்தன்று பாஞ்சராத்திர தீபம் ஏற்றப்பட்டு கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகள் திருக்கார்த்திகை தீபத்திருநாள் அன்றே பெளர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரம் இணையும் சமயத்தில் பாஞ்சராத்திர தீபமும் ஏற்றப்படுவது உண்டு.

இந்த பாஞ்சராத்திர தீபத்திற்கு பின்னணியில் ஒரு புராண கதையும் சொல்லப்படுகிறது.

ஒரு முறை பிரம்மதேவர், கலைமகளான சரஸ்வதி தேவிக்கு தெரியாமல் யாகம் ஒன்றை நடத்தினார். இதை அறிந்த சரஸ்வதி தேவி மிகவும் கோபம் கொண்டார். பிரம்மதேவரின் யாகத்தினை தடுக்க, பிரம்ம ராட்சசன் என்ற அரக்கனை அனுப்பினார். அந்த அரக்கனும் யாகத்தை தடுக்கும் வகையில், உலகம் முழுவதையும் இருளில் மூழ்கச் செய்தான்.

இதனால் மனம் வருந்திய பிரம்ம தேவர், மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தார். இதையடுத்து, மகாவிஷ்ணு ஜோதி வடிவாக தோன்றி, உலகின் இருளை போக்கினார். அதனுடன் அந்த அரக்கனையும் வதம் செய்தார். இவ்வாறு மகாவிஷ்ணு ஜோதி வடிவாக தோன்றி, உலகத்தை காத்த நாளே, 'விஷ்ணு கார்த்திகை' என வைணவர்கள் கொண்டாடுகிறார்கள். அதன் நினைவாக அந்த நாளில் தீபம் ஏற்றி வழிபடப்படுகிறது. அவ்வாறு ஏற்றப்படும் தீபத்துக்கு 'பாஞ்சராத்திர தீபம்' என்று பெயர்.

பெருமாள் கோவில்களில் 'பாஞ்சராத்திர தீபம்' என்ற பெயரில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்படும். இந்த நாளில் விளக்கு ஏற்றி வழிபட்டால் வாழ்வில் மன நிம்மதியும், செல்வ வளமும் ஏற்படும் என்பது நம்பிக்கை. வழக்கமாக வீட்டில் ஏற்றும் தீபத்துடன், 5 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். இது சிவ, விஷ்ணு இருவருக்கு உரிய வழிபாடாக கருதப்படுகிறது.

திருமாலின் திவ்ய தேசங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாஞ்சராத்திர தீபம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாளன்று, தொடர்ந்து 3 நாட்கள் சொக்கப்பனை ஏற்றப்படுகிறது. கோவில் கோபுரம் அருகே, சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும்போது, நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருள்வார்.

பாஞ்சராத்திர தீபம் தினத்தன்று, வீட்டை சுத்தம் செய்து, அலங்கரிக்க வேண்டும். பின்பு, வீட்டின் முன்பு கோலமிட்டு, அதில் தீபம் ஏற்றவேண்டும். பூஜையறையில் உள்ள விஷ்ணு பகவானின் படத்துக்கு பூக்களால் அலங்கரித்து, தாம்பூல தட்டில் ஐந்து மண் அகல் விளக்குகளை ஏற்றவேண்டும். பெருமாளுக்கு பிரியமான நைவேத்தியங்களான புளியோதரை, தயிர் சாதம், பொங்கல் போன்றவற்றை படைத்தல் வேண்டும். அதன்பிறகு, பெருமாளுக்கு தீபாராதனை காட்டி, பெருமாள் மந்திரங்களை சொல்லி குடும்பத்துடன் வழிபட வேண்டும்.

இவ்வாறு ஏற்றப்படும் ஐந்து விளக்குகள், பஞ்சபூதங்கள் இந்த அண்டத்தை ஆளுகின்றன என்பதை உணர்த்துகிறது. வீடுகளில் மட்டுமல்லாமல் பெருமாள் கோவில்களிலும் ஐந்து விளக்குகளை ஏற்றி வழிபடலாம். இவ்வாறு வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும், குடும்பத்தில் ஏற்படும் சகல பிரச்சினைகளும் விலகி, உயர்ந்த வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

1 More update

Next Story