திருக்கார்த்திகை திருநாளின் சிறப்புகள்

சிவபெருமான் மலையாக வீற்றிருக்கும் காரணத்தால், திருவண்ணாமலை சிறப்புக்குரியதாக இருக்கிறது.
கார்த்திகை தீபம் என்றாலே நினைவுக்கு வருவது திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபம் தான். ஆன்மிக பூமி, சித்தர் பூமி, நினைத்தாலே முக்தியை தரும் அற்புதத் தலம் என பல்வேறு சிறப்புகளை கொண்டது, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருத்தலம். திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகையன்று மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த மகாதீபத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசிப்பது மகா புண்ணியம் என்பார்கள். இந்த தீபத்தை தரிசிப்பவர்களின் பாவங்கள் நீங்கும், முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆண்டுக்கான மகாதீபம் நாளை (3-12-2025) ஏற்றப்படுகிறது.
திருக்கார்த்திகை திருநாள் பற்றி பல புராணக்கதைகள் கூறப்படுகின்றன. இருப்பினும், சிவபெருமான் ஜோதி வடிவாக மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் காட்சி அளித்த நாளே, திருக்கார்த்திகை திருநாள் எனப் பலராலும் போற்றப்படுகிறது.
ஒரு முறை மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் 'யார் பெரியவர்?' என்ற போட்டி ஏற்பட்டது. இதற்கு முடிவு காண, சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அப்போது சிவபெருமான் “என்னுடைய முடியையும், அடியையும் யார் முதலில் கண்டு வருகிறார்களோ, அவர்களே பெரியவர்” என்று பதிலளித்தார். பின்னர், சிவபெருமான் விண்ணுக்கும் மண்ணுக்குமாக மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக மாறி நின்றார்.
இதையடுத்து பிரம்மதேவர், அன்னப் பறவை வடிவம் கொண்டு, சிவபெருமானின் முடியைக் காணவும், திருமால் வராக (பன்றி) வடிவம் எடுத்து ஈசனின் அடியைக் காணவும் புறப்பட்டனர். ஆனால் பல கோடி ஆண்டுகள் ஆகியும் அவர்களால் ஈசனின் அடியையும், முடியையும் காண முடியவில்லை. திருமால், தன்னால் அடியைக் காண இயலவில்லை என்பதை ஈசனிடம் தெரிவித்தார்.
ஆனால் பிரம்மனோ, தான் ஈசனின் முடியைக் கண்டு விட்டதாக பொய் கூறியதுடன், அதற்கு சாட்சியாக சிவனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூ ஒன்றையும் அழைத்து வந்திருந்தார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், பிரம்மனுக்கு பூலோகத்தில் கோவில் இருக்காது என்றும், தாழம்பூவை இனி சிரசில் சூடமாட்டேன் என்றும் சாபம் அளித்தார்.
சிவபெருமானின் நெருப்பு வடிவத்தை கண்ட தேவர்கள் அனைவரும், அவரை இத்தலத்திலேயே தங்கும்படி வேண்டினர். இதையடுத்து சிவபெருமான் மலையாக உருமாறினார். பின்பு வழிபடுவதற்கு ஏற்றவாறு சுயம்பு லிங்கமாக மலையடிவாரத்தில் தோன்றினார். அந்த சுயம்புலிங்கத்தை மையமாக வைத்தே, தற்போதைய அண்ணாமலையார் ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது.
சிவபெருமான் மலையாக வீற்றிருக்கும் காரணத்தால், திருவண்ணாமலை சிறப்புக்குரியதாக இருக்கிறது. பல யுகங்களை தாண்டி நிற்கும் இந்த மலையில் முனிவர்களும், சித்தர்களும் வலம் வந்து வழிபட்டிருக்கிறார்கள். சிவபெருமான் அக்னி ஜோதியாக தேவர்களுக்கு காட்சியளித்த இடம் திருவண்ணாமலை ஆகும். எனவே கார்த்திகைத் தீபத் திருநாள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறும்.
கார்த்திகை தீபத் திருநாள் அன்று, அதிகாலையில் அண்ணாமலையார் சன்னிதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அந்த தீபத்தில் இருந்து மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றுவார்கள். பின்னர் அந்த தீபங்களை ஒன்றாக்கி, அண்ணா மலையார் அருகில் வைத்து விடுவர். பரம்பொருளான சிவபெருமான் பல வடிவங்களாக இருக்கிறார், அவரே பரம்பொருள் என்ற ஒருவராகவும் உள்ளார் என்பதே இதன் தத்துவம்.
பின்னர் அண்ணாமலையார் அருகில் வைக்கப்பட்ட தீபம் மலைக்கு கொண்டு செல்லப்படும். மாலையில் கோவில் கொடிமரம் அருகில் உள்ள மண்டபத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வெளியே வருவார். இந்த ஒருநாள் மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்தைக் காண முடியும். மற்ற நாட்களில் அவர் சன்னிதியை விட்டு வெளியே வருவதில்லை. அவர் முன்பாக அகண்ட தீபம் ஏற்றப்படும்.
அதன்பிறகே, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த மகா தீபம், தொடர்ச்சியாக 11 நாட்கள் எரியும். எரிந்த தீபத்தில் இருந்து எடுக்கப்படும் கருப்பு நிற மையானது, ஆருத்ரா தரிசனத்தின்போது பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும்.






