தூத்துக்குடியில் கருக்கலைப்பு செய்த பெண் திடீர் மரணம்: போலீஸ் விசாரணை
நெல்லை மாவட்டம், திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் கருக்கலைப்பு சிகிச்சை செய்துள்ளார். அதன் பின்னர் அப்பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.;
தூத்துக்குடி மாவட்டம், ஏரலை சேர்ந்தவர் தாமஸ் ஸ்டீபன். இவர் சாத்தான்குளம் அருகே உள்ள சிதம்பரபுரத்தில் ஆரோக்கிய செல்வபிரபா என்பவரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் முடித்தார். அதில் அவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஆரோக்கிய செல்வபிரபா மீண்டும் கர்ப்பமானதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஆரோக்கிய செல்வபிரபா, நெல்லை மாவட்டம், திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 18ம்தேதி கருக்கலைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் ஆரோக்கிய செல்வபிரபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென மேலும் உடல்நல குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் அவரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் டி.எஸ்.பி. சுபக்குமார், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார் மருத்துவமனையில் சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.