காதலியுடன் இருந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி; வீட்டை பூட்டி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
தனது கணவர் வேறொரு பெண்ணுடன் இருப்பதை கண்டு கலைச்செல்வி அதிர்ச்சியடைந்தார்.;
கடலூர்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த லோகனாதன் என்பவருக்கும், கலைச்செல்வி என்ற பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது வரதட்சணையாக 43 சவரன் தங்க நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, லோகனாதனும் கலைச்செல்வியும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் லோகனாதன் தன்னிடம் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் தற்போது வரை நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், தன்னை விவாகரத்து செய்யாமலேயே லோகனாதன் வேறொரு பெண்ணுடன் பண்ருட்டி பகுதியில் வசித்து வருவதாக கலைச்செல்விக்கு தகவல் தெரியவந்தது. இதன்படி புதுப்பேட்டை பகுதியில் உள்ள வீட்டில் லோகனாதன் இருப்பதாக கலைச்செல்விக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டிற்கு சென்ற கலைச்செல்வி அங்கு, லோகனாதன் தனது காதலியுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் லோகனாதனையும், அவருடன் இருந்த பெண்ணையும் சேர்த்து வீட்டிற்குள் வைத்து பூட்டிய கலைச்செல்வி, தன்னை விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணுடன் எப்படி குடும்பம் நடத்தலாம்? என்று கேட்டு கூச்சலிட்டார். பதிலுக்கு வீட்டிற்குள் இருந்த பெண் கலைச்செல்வியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு கூடினர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கலைச்செல்வியை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.