'தென்னிந்திய பகுதியில் 60,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் - அமர்நாத் ராமகிருஷ்ணன்
தமிழர்கள் குறித்து தெரிந்துகொள்ள கீழடி போன்ற அகழாய்வுகள்தான் ஆதாரங்களாக அமைகின்றன என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.;
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் தொல்லியல் இயக்குனர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"இந்தியாவின் வரலாற்றை பல கண்டுபிடிப்புகள் கட்டமைத்துள்ளன. அந்த வகையில் கீழடி அகழாய்வு மாணவர்களுக்கும், அறிஞர்களுக்கும் ஒரு வரலாற்று ஆதாரமாக இன்று கிடைத்துள்ளது. தமிழர்கள் குறித்து தெரிந்துகொள்ள கீழடி போன்ற அகழாய்வுகள்தான் ஆதாரங்களாக அமைகின்றன. தமிழர்கள் எப்போது தோன்றினோம் என்ற கேள்வி நம்மிடம் இருந்து கொண்டே இருக்கிறது.
அறிவியல் ரீதியாக செய்யப்படும் அகழாய்வுகள் வரலாற்றை உறுதிப்படுத்தும், மரபணு ரீதியாக செய்யப்படும் ஆய்வுகள் நமது வரலாற்றை முழுமைப்படுத்தும். தென்னிந்திய பகுதியில் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற செய்தியை அறிவியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் எடுத்துச் சொல்கின்றன. இதுபோன்ற பல ஆய்வுகளை நாம் செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.