கல்லூரி மாணவரின் இருசக்கர வாகனம் போலீசாரால் உடைக்கப்பட்டதா? - தமிழக அரசு விளக்கம்
சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கல்லூரி மாணவரின் இருசக்கர வாகனத்தை போலீசார் தாக்கி உடைக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.;
சென்னை,
சென்னை காமராஜர் சாலை போர் நினைவுச்சின்னம் அருகே போலீஸ் ரோந்து வாகன ஓட்டுனர், ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தை லத்தியால் உடைக்கும் காட்சி என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இது 6 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும். சென்னையில் கடந்த 2019-ம் ஆண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கல்லூரி மாணவரின் இருசக்கர வாகனத்தை தாக்கி உடைத்தார். இதுகுறித்து அப்போதே பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை அண்மையில் நடந்த நிகழ்வுபோல் திரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள். தவறான தகவலை பரப்பவேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.