மாவட்ட செயலாளர்களுடன் விஜய் இன்று ஆலோசனை
உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை விஜய் அறிமுகம் செய்கிறார்.;
சென்னை,
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க. வியூகம் அமைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு 25-ந்தேதி மதுரையில் கட்சியின் 2-வது மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து விஜய் பேச இருக்கிறார்.இதற்கிடையே, மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட செயலாளர்களுடன் விஜய் கலந்துரையாட இருக்கிறார். இந்த கலந்துரையாடல் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதற்கான அழைப்பு மாவட்ட செயலாளர்களுக்கு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை விஜய் அறிமுகம் செய்கிறார். இந்த புதிய செயலி வழியே உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட உள்ளது. இந்த செயலி செயல்முறை குறித்த பயிற்சி, மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.அதனை தொடர்ந்து மதுரை 2-வது மாநில மாநாட்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், குழுக்கள் அமைப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.