நாங்கள் ஏமாளி அல்ல என்று பேசிய எடப்பாடி பழனிசாமி: நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்
எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.;
சென்னை,
டெல்டா மாவட்டங்களில் 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்தோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, திருத்துறைப்பூண்டியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். தஞ்சாவூர் - கோடியக்கரை சாலையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:"ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும்; வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. உங்களைப் போல (ஸ்டாலின்), வாரிசுக்காக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை; மக்கள் விருப்பத்திற்காக மட்டுமே ஆட்சிக்கு வர நினைக்கிறோம். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரணியில் திரள வேண்டும்," என்று பேசினார்.
பாஜக தலைவர்கள் சிலர் கூட்டணி ஆட்சி என்று பேசி வரும் நிலையில், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இதனால், அதிமுக - பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடு அதிகரிக்கிறதா என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் பேசியதாவது: "எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை. 'நீங்கள் கட்சியை அடகு வைத்துவிட்டுப் போய்விடுவீர்கள்' என்று திமுகவினர் கேட்கிறார்கள். 'அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும்' என்று பேசியதற்கு அவர் (எடப்பாடி பழனிசாமி) பதில் அளித்துள்ளார். இதில் உள்அர்த்தம் எதுவும் கிடையாது. நான் காலையிலேயே எடப்பாடி பழனிசாமியிடம் பேசினேன். எங்களின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்," என்றார்.