குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை தொடங்குகிறது... முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்

மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.;

Update:2025-07-19 18:12 IST

குற்றாலம்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றாலத்தில் கடந்த மே மாத இறுதியிலேயே சாரல் மழை பெய்ய தொடங்கியது. தற்போது குற்றாலத்தில் முழுமையாக சீசன் களைகட்டி வருகிறது. அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதோடு குளிர்ந்த காற்று வீசி வருவதால் குற்றாலத்தில் இதமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் தொடர்மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது இந்த சூழலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குற்றால சாரல் திருவிழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது.

இந்த திருவிழாவை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், தென்காசி மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைக்கின்றனர். இதையொட்டி கலைவாணர் அரங்கம், ரெயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்குகள் அமைக்கும் பணி என முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நேற்று மாலை முதல் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கியதால் வாகனம் நிறுத்தும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் மற்றும் குற்றால சாரல் விழாவும் தொடங்க இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பொழுதுபோக்கு வசதிக்காக ஐந்தருவி செல்லும் சாலையில் அமைந்துள்ள வெண்ணமடை படகு குழாமில் படகு சவாரியும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சி பூங்கா மற்றும் சிறுவர் பூங்காக்களிலும் விளையாடுவதற்கு கூடுதல் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்