தூத்துக்குடியில் போலீஸ் ரோந்து சென்ற கார் விபத்து: ஒருவர் பலி, சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே மணல் கடத்தல் தொடர்பாக எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.;

Update:2025-07-20 23:18 IST

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே மணல் கடத்தல் தொடர்பாக எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து எட்டயபுரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா, காவலர் அற்புதசாமி இருவரும் மாதவராஜாவின் சொந்த காரில் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டருடன் காரில் எட்டயபுரம் தெற்கு ரத வீதியைச் சேர்ந்த அருண்குமார், ராஜா, கார்த்திக் உள்ளிட்ட 3 பேரும் சென்றுள்ளனர்.

தாப்பாத்தி, முத்தலாபுரம், சிந்தலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வழியாக எட்டயபுரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த பொழுது சிந்தலக்கரை- துரைச்சாமிபுரம் விலக்கு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரின் மீது மோதி எதிர்புறம் உள்ள சாலைக்கு சென்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் இருந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா, அற்புதராஜா, கார்த்திக், ராஜா உள்ளிட்ட 4 பேரும் கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்