நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம்: மத்திய அரசு விசாரணை?
எந்தெந்த மருத்துவமனைகளில் சட்டவிரோதமாக கிட்னி பெறப்படுகிறது? என ஆய்வு செய்ய மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.;
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது கிட்னியை விற்பனை செய்ததாக பேசும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் துர்காமூர்த்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறையினர் பள்ளிபாளையம் பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சில பெண்கள் தங்களது கிட்னியை விற்பனை செய்ததாகவும், அதற்கு புரோக்கராக அன்னை சத்தியா நகரை சேர்ந்த ஆனந்தன் என்பவர் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஆனந்தனிடம் விசாரணை நடத்துவதற்காக அதிகாரிகள் அவருடைய வீட்டுக்கு சென்றனர். ஆனால் வீட்டில் அவர் இல்லை. இதையடுத்து தலைமறைவான ஆனந்தன் குறித்து அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவில் சிறுநீரகம் விற்பனை செய்ததாக பேசி இருந்த பெண் உள்பட 5-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையில் கிட்னியை ரூ.6 லட்சத்துக்கு அந்த பெண் விற்ற பகீர் தகவல் வெளியானது. கிட்னியை விற்பனை செய்ததை அந்த பெண்ணே ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் கிட்னி விற்பனை விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தலைமறைவான ஆனந்தன் குறித்த தகவல்களையும் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக இடைத்தரகர்கள் எங்கு எல்லாம் செயல்படுகிறார்கள்? என ஆய்வு நடத்த மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. எந்தெந்த மருத்துவமனைகளில் சட்டவிரோதமாக கிட்னி பெறப்படுகிறது? என ஆய்வு செய்யவும், ஏதேனும் புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் கிட்னி வாங்கியது தொடர்பாக ஈரோடு, திருச்சி தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாமக்கல் கிட்னி விற்பனை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் விரைவில் நாமக்கலுக்கு நேரில் வந்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.