22, 23-ந் தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்கிறார் மு.க.ஸ்டாலின்

கோவையில் பெருந்தலைவர் காமராஜர் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.;

Update:2025-07-20 12:58 IST

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகிற 22-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருப்பூர் மாவட்டம் செல்கிறார். அங்கு பல்லடம் மற்றும் உடுமலையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதில் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

23-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி செல்கிறார். அங்கு பொள்ளாச்சி-உடுமலை ரோடு நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்டம் நிறைவேற காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், சுப்பிரமணியம், மகாலிங்கம் ஆகிய தலைவர்களின் உருவச்சிலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதையடுத்து கோவை வரும் அவர் தனியார் ஓட்டலில் நடைபெறும் கோவைக்கான மாஸ்டர் பிளான் திட்டம் குறித்து அதிகாரிகள், பொதுமக்கள், தொழில்துறையினர், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட கோவை மாஸ்டர் பிளான்-2041 குறித்து பொதுமக்களின் கருத்துகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிய உள்ளார். முதல்-அமைச்சர் கோவை வருகையை முன்னிட்டு மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க கோவை மாநகர் மற்றும் புறநகர் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அணிகளை சேர்ந்தவர்கள் தயாராகி வருகின்றனர்.

22 மற்றும் 23 ஆகிய 2 நாட்கள் திருப்பூர் மற்றும் உடுமலையில் நடைபெற உள்ள அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். அதன்படி 22-ந் தேதி திருப்பூர் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட கோவில்வழி பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். வேலம்பாளையத்தில் புதிய அரசு மருத்துவமனை, பேருந்து நிலையத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். உடுமலை பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார், பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர் சிலைகளை திறந்து வைக்கிறார்.

23-ந் தேதி உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும்முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசுகிறார். திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்