'பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்' - அமைச்சர் அன்பில் மகேஷ்
தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.;
தஞ்சாவூர்,
அரசு பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 நாட்கள் பணிபுரியும் அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.12,500 வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், தி.மு.க. 2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் அடிக்கடி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம் அருகே பகுதிநேர சிறப்பு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கடந்த 8-ம் தேதி தொடங்கி காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின்போது அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அந்த கோரிக்கைகள் தமிழக முதல்-அமைச்சரிடம் கொண்டு செல்லப்பட்டு பரிசீலனை செய்யப்படும். விரைவில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி வரும் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.