ஆண் நண்பருடன் பேச்சு... காதலியை குத்திக்கொன்ற காதலன் - நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் விபரீதம்

காதலன் தினேஷ் நாகையில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.;

Update:2025-07-20 13:45 IST

காஞ்சிபுரம் ,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிறிஸ்துவகண்டிகையில் நாகையை சேர்ந்த செளந்தர்யா என்பவர் அறை எடுத்து தங்கி ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அறைக்கு அருகே தினேஷ் என்பவரும் தங்கி இருந்தார். இருவரும் ஒரே இடத்தில் தங்கி இருந்ததால் அடிக்கடி சந்தித்து பேசி பழகி வந்தனர்.

ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்கினர். விடுமுறை தினங்களில் சௌந்தர்யாவும், தினேஷும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். இவ்வாறு 2 வருடங்களாக தொடர்ந்த இவர்களின் காதல் விஷயம் வீட்டுக்கு தெரிந்த நிலையில், காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதற்கிடையில், சௌந்தர்யா ஆண் நண்பர் ஒருவருடன் செல்போனில் பேசிவந்துள்ளார். இதனை அறிந்த தினேஷ், சௌந்தர்யாவை கண்டித்துள்ளார். இருப்பினும் சௌந்தர்யா ஆண் நண்பருடன் பேசுவதை நிறுத்தவில்லை.

இந்த நிலையில், நேற்றும் இந்த விவகாரம் குறித்து இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், காதலன் தினேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சௌந்தர்யாவை சரமாரியாக குத்தினார். இதில் கழுத்து, தலை, கை உள்ளிட்ட இடங்களில் குத்துப்பட்ட இளம்பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். காதலி இறந்ததை அறிந்த தினேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய தினேஷை வலைவீசி தேடி வந்த நிலையில் அவர் நாகையில் உள்ள காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்