சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு
சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது.;
சென்னை,
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மேலாளர் அறை மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று நள்ளிரவு வந்த மின்னஞ்சலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதன் பின்னர் சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் சோதனை நடைபெறும் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு அதிகரிப்பால் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் புறப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.