அரசு பள்ளிக்குள் புகுந்து கதவுகளை உடைத்த கரடி: மாணவர்கள், பெற்றோர் அச்சம்
குன்னூர் பகுதிகளில் நாவல் பழ சீசன் தொடங்கி உள்ளதால், பழங்களை தேடி கரடிகள் உலா வருகின்றன.;
நீலகிரி,
ஊட்டி, குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சாக்லேட் தொழிற்சாலைக்குள் கரடிகள் புகுந்து வருகின்றன. தற்போது குன்னூர் பகுதிகளில் நாவல் பழ சீசன் தொடங்கி உள்ளதால், பழங்களை தேடி கரடிகள் உலா வருகின்றன.
இந்தநிலையில் குன்னூர் அடுத்த மேலூர் ஒசட்டிக்கு கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கரடி புகுந்து வருகிறது. அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளி கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. குறிப்பாக சத்துணவு கூடத்தில் உள்ள எண்ணெய்யை குடிக்கிறது.
இதுகுறித்து அப்பகுதி பள்ளி மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், கரடி நடமாட்டம் காரணமாக இரவு நேரத்தில் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை இருந்தது. தற்போது பள்ளிக்கு அடிக்கடி வந்து செல்லும் கரடியால், பகல் நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது. எனவே, அட்டகாசம் செய்து வரும் கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும். மேலும் பள்ளியில் சேதப்படுத்தப்பட்டுள்ள கதவுகளை முழுமையாக சீரமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், மேலூர் ஒசட்டி பள்ளி வனப்பகுதி அருகில் உள்ளதால் கரடி எளிதாக அந்த பகுதிக்கு வருகிறது. பள்ளியில் கதவுகள் பழமையாக உள்ளதால், எளிதாக உடைத்து உள்ளே செல்கிறது. எண்ணெய் வாசனையை வைத்தே பள்ளிக்குள் புகுந்து விடுகிறது. எண்ணெய் உட்பட உணவுப் பொருட்களை பாதுகாப்பான மாற்று இடங்களில் வைக்க வேண்டும். குழு அமைத்து, இரவு நேரங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம். உயர் அதிகாரிகள் அனுமதி கிடைத்தால் கரடி கூண்டு வைத்து பிடிக்கப்படும் என்றனர்.