அருணாசலம் என்று பெயர் பலகை: கள்ளக்குறிச்சி அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம்
கள்ளக்குறிச்சியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசு பஸ் பெயர் பலகையில் அருணாசலம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை 1 மற்றும் 2-ல் இருந்து வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எந்தெந்த ஊர்களுக்கு அரசு பஸ்கள் செல்லும் என்ற விவரம் அந்த பஸ்சின் முன்புறம் உள்ள எல்.இ.டி. பெயர் பலகையில் குறிப்பிடப்படும்.
அந்த வகையில் கடந்த 15-ந்தேதி கள்ளக்குறிச்சியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசு பஸ் பெயர் பலகையில் அருணாசலம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது திருவண்ணாமலைக்கு பதிலாக அருணாசலம் என ஆங்கிலத்தில் டிஜிட்டல் போர்டில் வந்தது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டு இருந்த பதிவில், "இதை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றி. வழித்தடப் பலகையின் பெயர் இப்போது 'திருவண்ணாமலை' என்று திருத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் ஒரே மாதிரியான பெயர்களை உறுதி செய்ய அனைத்து பணிமனைகளுக்கும் அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பஸ்சின் கண்டக்டரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த விஜயராகவனை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து, அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டல பொது மேலாளர் ஜெயசங்கர் உத்தரவிட்டுள்ளார்.