தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 16,741 மனுக்கள்: கலெக்டர் தகவல்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் இளம்பவகத் தெரிவித்தார்.;
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கக்கூடியது தான் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.
அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த சிறப்பு திட்ட முகாமினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.7.2025 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து துவக்கி வைத்தார்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 15.7.2025 முதல் 18.7.2025 வரை நடைபெற்ற இச்சிறப்பு திட்ட முகாமில் மொத்தம் 16,741 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
பிற துறைச்சார்ந்த 7,173 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவது தொடர்பாக 9,568 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 4,410 மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்வு காணக்கூடிய மனுக்களாக பெறப்பட்டுள்ளது. 2,783 மனுக்கள் 45 நாட்களுக்கு அதிகமாக தீர்வு காணக்கூடிய மனுக்களாக பெறப்பட்டுள்ளது. பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.